சர்வதேசத்தை ஏமாற்ற அரசு முயற்சி! – ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா குற்றச்சாட்டு.
“தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதன் நோக்கம், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு விட்டது என்று சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கே. தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மறு பெயரே.”
இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது:-
“ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் நிலையில், அதற்குப் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. அதையடுத்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் “பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஸ்ரீலங்கா கொண்டுவரும்” என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசால் 1947ஆம் ஆண்டு 25ஆம் இலக்கச் சட்டமாகக் கொண்டுவரப்பட்ட பொதுக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்காமல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பெயரை மாற்றி தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய சட்டத்தைக் கொண்டுவர உத்தேசித்துள்ளமை பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு புதிய பெயர் வைப்பதே தவிர வேறு எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை.
கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பெயர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்று மாற்றப்பட்டு சட்டவரைவுகள் நிறைவடைந்திருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிக மிக மோசமானதும், கொடூரமானதுமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரை மட்டும் மாற்றிவிட்டு தேசிய பாதுகாபபுச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது. இந்தச் சட்டம் நிச்சயமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மோசமானதாக இருக்க வாய்ப்புள்ளது.
சர்வதேசத்தை ஸ்ரீலங்கா ஏமாற்ற முயற்சிக்கும் அதேநேரம், அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க முடியாதவாறு பாதுகாப்பு மிக்க பலமான அரணை நிறுவிக்கொள்ள முயற்சிக்கின்றது” – என்றார்.