அரசு பங்களாவைக் காலி செய்ய சுப்ரமணியன் சுவாமிக்கு கால அவகாசம்
அரசு பங்களாவைக் காலி செய்ய, பாஜக தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரிமணியன் சுவாமிக்கு தில்லி உயர் நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, மத்திய அரசின் அரசு பங்களா ஒன்று ஐந்து ஆண்டு காலத்துக்கு சுப்ரமணியன் சுவாமிக்கு ஒதுக்கப்பட்டது.பிறகு அவர் மாநிலங்களவை உறுப்பினரானதும், அதே பங்களாவில் தங்கியிருந்தார்.
அவரது பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவுபெற்றாலும், பாதுகாப்புக் கருதி, அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்ட அந்த ஐந்து ஆண்டுக் காலம் இன்னும் நிறைவடையாததால், மற்றொரு அரசு பங்களா ஒதுக்குமாறு கோரியிருந்தார்.
அவரது மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், அரசு பங்களாவை காலி செய்ய 6 வார கால அவகாசம் வழங்கியும், தில்லியில் அவருக்குச் சொந்தமாக இருக்கும் இடத்துக்கு சுப்ரமணியன் சுவாமியை குடிபெயருமாறு அறிவுறுத்தி, அந்த பங்களாவில், இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவிட்டது.