ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி திடீர் விஜயம்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று திடீர் விஜயம் செய்து முன்னணி களமுனைகளில் தனது படைகளைச் சந்தித்து அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன் கார்கிவ் பகுதி உட்பட ரஷ்யா ஆக்கிரமித்த பல பகுதிகளை உக்ரைன் படைகள் மீளக் கைப்பற்றி முன்னேறி வருகின்றன. உக்ரைன் படைகளின் திடீர் உத்வேக தாக்குதல்களால் ரஷ்யப் படைகள் அதிர்ச்சியூட்டும் தலைகீழ் மாற்றத்தை சந்தித்தன.
இந்நிலையில் மீட்கப்பட்ட மிக முக்கிய இராணுவத் தளமாகக் கருதப்படும் இலியம் ( Izium) நகருக்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று திடீர் விஜயம் செய்தார். 4 நாட்களுக்கு முன்னர் வரை ரஷ்யாவின் முக்கிய கோட்டை மற்றும் பிராந்தியத்தில் ஆயுத-தளபாட மையமாக இருந்த எரிந்த நகர சபை கட்டிடத்தின் முன் உக்ரேனிய கொடி உயர்த்தப்பட்டிருந்ததை அவர் பார்வையிட்டார்.
ரஷ்யா ஆக்கிரமித்த இலியம் நகரில் இப்போது எங்கள் நீல-மஞ்சள் கொடி பறக்கிறது. இந்தக் கொடி ஒவ்வொரு உக்ரேனிய நகரத்திலும் கிராமத்திலும் பறக்கும் என இந்த விஜயத்துக்குப் பின்னர் நேற்றிரவு வீடியோ உரையில் ஜெலென்ஸ்கி கூறினார்.