இலங்கை மீதான தீர்மானத்தை நீடித்து வலுப்படுத்த வேண்டும்! – அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு கோரிக்கை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், 2 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றும் அமெரிக்க செனட்டர்களால் கோரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் மோசமான நிர்வாகம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளால் சவாலுக்குள்ளாகியிருக்கும் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண ஒரு விரிவான சர்வதேச அணுகுமுறை தேவை என்றும் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறும் தீர்மானத்தை நீடிக்க வேண்டும் என்று கோரும் இந்தக் குழு, பொறுப்புக்கூம் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அதேநேரம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான இலங்கை மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று இலங்கை பாதுகாப்புப் படைகளையும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் சிறுபான்மை இனக் குழுக்களுடனும், எதிர்க்கட்சிகளுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் இலங்கை தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றது. இலங்கைக்குச் சர்வதேச சமூகம் வலுவான ஆதரவை வழங்கும் நிலையில், போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் முன்னுரிமையாக இருப்பதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் பாப் மெனெண்டஸ் குறிப்பிட்டுள்ளார்.