தீபாவளி பண்டிகையொட்டி விண்ணை முட்டும் ஆம்னி பேருந்து கட்டணம்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..
தமிழகத்தில் பண்டிகை காலம் வந்தாலே தனியார் ஆம்னி பேருந்து கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு கடுமையாக உயர்ந்து வருவது வாடிக்கையாகி விட்டது. அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் முடிந்துவிட்ட நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்குள் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தீபாவளிக்காக இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரத்து 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கோவைக்கு இரண்டாயிரத்து 500 ரூபாய் முதல், அதிகபட்சமாக மூவாயிரத்து 200 ரூபாய் வரை தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
திருநெல்வேலிக்கு ரூ.3000 முதல் அதிகபட்சமாக ரூ.4000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் விடுமுறை காலங்களில் தொடர்ந்து கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.