இந்தி தினத்துக்கு பதில் இந்திய மொழிகள் நாள் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…
இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும், வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என முதலமைச்ச ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கான விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்” என்றும், நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும் என பேசியிருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின், ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால், கலாசாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள, இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’என்கிற பண்பாட்டிற்கு நேர் எதிரானது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அப்போதுதான் உண்மையான கலாசாரத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே என குற்றச்சாட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அந்த ஆதிக்க உணர்வை எதிர்த்து தாய்மொழி காத்திடத் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை அன்னைத் தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக் கொண்டது எங்கள் தமிழ்நாடு என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை ’ஹிந்தி’யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என கூறியுள்ள ஸ்டாலின், உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளை, இந்திக்கு இணையாக, மத்திய அரசின் அலுவல் மொழிகளாக விரைவில் அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.