2022 ஆசியக் கோப்பை – இலங்கை அணி!
இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு முன்னாள் வீரர்களின் கருத்துக்களில் கூட இந்த அணி பற்றியும் அணி வீரர்கள் பற்றியும் எந்த அலசலுமே பெரிதாக இல்லை. ஆனால் இந்த அணி கோப்பையை வென்று இருக்கிறது!
இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு இலங்கை அணி கோப்பையை வெல்லும் என்று ஒருவர் கூறியிருந்தால், அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவைக் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தமா? இந்தியா அல்லது பாகிஸ்தான் அணிகள் கோப்பையை வெல்லலாம் என்று கூறியவர்கள் கிரிக்கெட் அறிவில் பின்தங்கியவர்களா? மேலும் ஆசியக் கோப்பையில் இலங்கை அணி அணிகளுக்கு ஏதாவது ஆச்சரியத்தைத் தரலாம் என்பதற்கு பெரிய கிரிக்கெட் அறிவு தேவையா?
மூன்றுக்குமே அப்படிக் கிடையாது என்பதுதான் உண்மை. இந்தத் தொடரில் இலங்கை அணிக்கு நிகழ்ந்த சம்பவங்களும், கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டின் இயக்கங்கள் அப்படியானது!
இலங்கை அணி முதல் போட்டியில் படுதோல்வியைச் சந்திக்கிறது. அடுத்து பங்களாதேஷ் அணியுடன் முக்கியமான போட்டியில், இலங்கை அணிக்காக அந்தப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த குஷால் மெண்டிஸ்க்கு இரண்டு கேட்சுகள், ஒரு எளிதான ரன் அவுட், ஒரு அவுட் அப்பில் கேட்காதது என நான்கு வாய்ப்புகள் ஒரு ஆட்டத்திற்குள் உருவாகிறது. இதனால் பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஆப் ஸ்பின்னர்களின் ஓவர்களை முன்கூட்டியே முடிக்க முடியாமல் போகிறது. இத்தோடு வெகு சீக்கிரத்தில் தனது அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களை தவறாக முடிக்கிறார்.
அடுத்து இந்திய அணி கேப்டன் சூப்பர் நான்கு சுற்றில், கடைசி நான்கு ஓவர்களுக்கு 42 ரன்கள் தேவை எனும் பொழுது 17, 19வது ஓவர்களை அர்ஸ்தீப் மற்றும் 18, 20 வது ஓவர்களை புவனேஷ், மற்றும் ஹர்த்திக் என போயிருக்கவேண்டும். இதுதான் யாரும் செய்ய வேண்டியது. அந்த ஆட்டத்தில் அந்த நேரத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்தது ஆக மோசமான ஆன்-பீல்ட் கேப்டன்சி. இந்த ஆட்டத்தில் கடைசியில் ரிஷப் பண்ட் ஒரு ரன் அவுட்டை தவற விடுகிறார். ( அதே சமயத்தில் இறுதி கட்ட ஓவர்களில் இலங்கையின் பந்து வீச்சாளர்களும், இலங்கையின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை எடுத்துச் சென்ற விதம் உலகத்தரமானது )
பாகிஸ்தான் அணியுடனான இறுதிப்போட்டியில், 3 விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்து இலங்கை அணி நிற்கும்பொழுது, அந்த அணிக்கு அப்பொழுது துருப்பு சீட்டாக இருக்கப்போவது ராஜபக்சே என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்பொழுது அவரை தற்காப்பு ஆட்டம் ஆடும்படி ஆப் ஸ்பின் வீசி நாமே களத்தில் நிற்க நேரத்தை கொடுக்கக்கூடாது. அணியின் பிரதான left-hand ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் நவாஸை வைத்து தாக்கி இருக்க வேண்டும். மேலும் அதற்கடுத்து வரும் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கும் பந்தை வெளியே திருப்பும் நவாஸ் சிரமமாக இருந்திருப்பார். பாகிஸ்தான் கோப்பையை இழந்தது கேப்டன் பாபர் இப்திகார் இடம் போனதுமே நடந்துவிட்டது.
இந்த மூன்று போட்டிகளுமே இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டிகள். இந்த மூன்று போட்டிகளிலும் குசால் மெண்டிஸ்க்கு கிடைத்த நான்கு அதிர்ஷ்டங்களை தாண்டி, பங்களாதேஷ் இந்தியா பாகிஸ்தான் மூன்று அணிகளின் கேப்டன்களும் ஆன்-ஃபீல்டில் எடுத்த முடிவுகள் மட்டமானவை. இப்படியெல்லாம் நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஆனால் நம்மால் வெளியிலிருந்து தொடர்பு முன்பு இருக்கும் நிலைமைகளை வைத்துதான் சொல்ல முடியும். இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
இந்தத் தொடர் ஒரு விதிவிலக்கு. இதுவரை ஆசிய கோப்பை போட்டிகளில் இப்படி நடந்தது கிடையாது. இனியும் நடக்க வாய்ப்புகள் மிகக்குறைவு. ஆப்கானிஸ்தான் அணி வரை அச்சுறுத்தியது. ஆட்டங்கள் பல திருப்பங்களைக் கொண்டு நகர்ந்தது. இதையெல்லாம் ஒருவரால் முன்கூட்டியே கணித்து இருக்க முடியுமா என்றால் முடியவே முடியாது. இந்த விளக்கம் இலங்கை அணி அதிர்ஷ்டத்தால் கோப்பையை வென்றது என்கிற அர்த்தம் கிடையாது. கணிப்பு என்பது இப்படி ஒரு விதிவிலக்கான தொடரில் மிகவும் சிக்கலானது. உண்மை முடிவுகளுக்கு நெருக்கமாக யாராலும் கூற முடியாது.
அடுத்து இலங்கை அணி இந்தத் தொடரில் ஆச்சரியங்களை அளிக்கும் என்று சொல்வதற்கு பெரிய கிரிக்கெட் மூளை தேவையா?
இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியுடன் பெரிய தோல்வியைச் சந்திக்கிறது. அதற்குப் பிறகு வேறு ஒரு விஷயம் தொடர்பாக பேசும்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் “புவனேஸ்வர் குமாரின் ஸ்விங் பந்திற்கு பந்தின் லைனில் ஆடி ஆப்கன் வீரர்கள் விழுந்து விட்டார்கள். அவர்களுக்கு அனுபவம் குறைவு. அவர்களுக்கு ஸ்விங்கை நிராகரிக்க தெரியவில்லை ” என்று கூறியிருந்தார்.
பங்களாதேஷ் உடன் இலங்கை அணி வெல்லும் பொழுது அந்த ஆட்டத்திற்குள் அதிர்ஷ்டங்களும், எதிரணி கேப்டனின் தவறான நகர்வுகளும் இருந்தாலும், ஆப்கன் அணி இலங்கை அணியை விட சிறந்த அணி என்று பேச்சு இருந்ததற்கு, இலங்கை அணி தான் ஆப்கன் அணியை விட சிறந்த அணி என்று எழுதியிருப்பேன். காரணம், அவர்களின் நீண்ட சிறந்த கிரிக்கெட் கலாச்சாரம். அவர்கள் பார்த்த கிரிக்கெட் வீரர்கள், பழகிய கிரிக்கெட் தரமானது. அவர்களிடம் சிறந்த கிரிக்கெட் விளையாடுவதற்கான நீண்ட சிறந்த கிரிக்கெட் கலாச்சாரம் இருக்கிறது. அந்த அடிப்படைகள் வெஸ்ட் இண்டீஸ் போல அதிகம் சிதையவில்லை. புவனேஸ்வர் குமார் இடம் நிசாங்கா, தனஞ்சய டி சில்வா போன்றவர்கள் எளிதில் சிக்க மாட்டார்கள். அவர்களுக்கு கிரிக்கெட் அடிப்படைகள் தெரியும். அவர்கள் ஸ்விங்கை கட் செய்வார்கள்.
காரணம் இவர்கள் பார்த்து பழகி வந்த கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட்டும், இலங்கை நாட்டின் கிரிக்கெட் கலாச்சாரமும் அப்படியானது. அங்கு கிரிக்கெட்டுக்கான முதலீடு குறைந்தபட்சம் ஒரு 30 ஆண்டுகளாக செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கிரிக்கெட் கலாச்சாரம் உடைய அணி ஒரு தொடரில் எதிர் அணிகளில் யாருக்காவது அதிர்ச்சித் தோல்வி அளிக்கும் என்று கூற பெரிய மூளை தேவை கிடையாது. இப்படி எல்லாம் வலியுறுத்திச் சொல்வதுதான் அந்த அணியை தரம் குறைக்கும்!
அடுத்து கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டின் இயக்கம்…
கிரிக்கெட் என்பதே ஒரு குறும்பான சேட்டை பிடித்த மனிதன் என்பதாகத்தான் நான் உருவகப்படுத்தி வைத்திருக்கிறேன். கிரிக்கெட் தான் தூக்கி வளர்க்கும் தன் பிள்ளையைக் கூட குறைந்தபட்சம் கிள்ளி வைத்து அழ வைக்காமல் விடாது. மூன்றாண்டு காலம் விராட் கோலியை அலைக்கழிக்க வைத்து மனரீதியாக உடைய வைத்தது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்லப்படும் சச்சினை பார்த்து, “இங்கு கடவுள் என்பது நான்; நீ என் சரியான பக்தன் அவ்வளவுதான்” என்பதாக சிட்னி மைதானத்தில் கவர் டிரைவ்கே போக முடியாமல் செய்து, தன் முன்னால் மண்டியிட வைத்தது என கிரிக்கெட்டின் திருவிளையாடல்கள் ஏராளம். இவர்களுக்கே இப்படி என்றால் அனுமானங்கள் கூறும் என்னைப் போன்றவர்களுக்கு எல்லாம்?…
அடுத்து டி20 கிரிக்கெட் என்பது ஓவர்கள் குறைவாக இருப்பதால், ஒரு பந்தில் அடிக்கப்படும் ஒரு சிக்சர் தேவையான ரன் விகிதத்தை திடீரென்று குறைக்கும், ஒரே ஒரு டாட் பந்து தேவைப்படும் ரன் விகிதத்தை அதிகரிக்கும். இப்படி ஆட்டம் ஒரு பந்தில் பல்வேறு எதிர்பாரா மாற்றங்களைச் சந்திக்கும். இப்படி ஒரு ஆட்டத்தில் யாராவது அவர்களது அனுமானங்களை கூறினால், அப்படி நடக்காமல் போகும் பொழுது அவர்களை கேலி செய்வதோ, அல்லது கூறிய அனுமானங்கள் ஓரளவிற்கு சரியாக நடக்கும் பொழுது அதற்காக சட்டை காலரை ஏற்றிவிட்டுக் கொள்வதோ, இரண்டுமே அர்த்தமற்றது!
பொதுவாக ஒரு கிரிக்கெட் வடிவத்திற்கான ஏற்ற அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறதா? ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் ஏற்ற அணுகுமுறை வீரர்களிடம் அந்த அணியில் இருக்கிறதா? அவர்களின் திட்டங்கள் எப்படியாக இருக்கிறது? எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் எவ்வாறு நகர்கிறது? நவீன கிரிக்கெட்டின் தேவைகளை ஈடு கட்டிக்கொண்டே, நீண்டநாள் முதலீடாக சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்குகிறார்களா? இதெல்லாம்தான் அலசலுக்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டது. இதற்குத்தான் கிரிக்கெட் அறிவு தேவைப்படுகிறது.
ஒருவர் கிரிக்கெட் விமர்சகராக இருக்கமுடியும் ஆனால் கிரிக்கெட் ஜோசியராக இருக்கவே முடியாது. அதற்கு கிரிக்கெட் விடவே விடாது!