ஜப்பான் பறக்கின்றார் ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக தமது பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா மற்றும் இந்தியாவுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க அழைக்குமாறு ஜப்பானுக்கு வலியுறுத்துவார் எனவும் ஜனாதிபதி செயலகத்தின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரங்கள் அவரது நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக இருக்கும் எனவும், ஜனாதிபதி ரணில், ஜப்பானிய பிரதமரை டோக்கியோவில் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் முன்னெடுக்கும் நிகழ்வில், தற்போதைய நெருக்கடி மற்றும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்கள் பற்றிய அண்மைக்கால தீர்மானங்கள் குறித்தும் ஜனாதிபதி முன்வைப்பார் என்று ஜனாதிபதி செயலகத்தின் வட்டாரம் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதியின் இந்த விஜயம் இம்மாதம் 25 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் எனவும், செப்டெம்பர் 30ஆம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் செப்டெம்பர் 28 ஆம் திகதி பலதரப்பு நிதி நிறுவனத்தின் 55ஆவது ஆண்டு கூட்டத்தின் நிகழ்வில் பங்கேற்பார் எனவும் கூறப்படுகின்றது.