75,500 கிலோ திருப்பதி முடி காணிக்கை..! – ஏலம் மூலம் ரூ.27.66 கோடி வசூல்
நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி கோயிலுக்கு நிகராக அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும் பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதுடன், வருகை தரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்கள் முடியை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
இரண்டு ஆண்டு கொரோனா முடக்கத்திற்கு பின் இந்தாண்டு திருமலைக்கு வருகை தந்த பக்தர்கள் கூட்டம் மீண்டும் கலைக்கட்டியுள்ளது. கோடை விடுமுறை அதை ஒட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த 75,500 கிலோ தலை முடி ரூ.27.66 கோடி ஏலத்தில் விற்பனை ஆனது.
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதில் பேரில் தங்கள் தலை முடியை காணிக்கையாக சமர்ப்பிப்பது வழக்கம். தினமும் குறைந்தபட்சம் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலை முடியை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர். பக்தர்கள் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கும் தலைமுடியை அவற்றின் நீளம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆறு வகைகளாக பிரித்து தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தி விற்பனை செய்கிறது.
தலை முடி விற்பனை மூலம் மட்டுமே தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.200 கோடி வரை லாபம் கிடைக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தலைமுடி ஏலத்தில் 75 ,500 கிலோ தலை முடி 27 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை ஆனது.