வெளிநாட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி 75 இலட்சம் ரூபா மோசடி செய்தவர் கைது.
வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிப்போரை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி 75 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இன்று ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, வத்தளைப் பகுதியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நபர் ஒருவர் கிளிநொச்சி, பூநகரி பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி கடந்த 2021ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 10ஆம் திகதி 12 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளார்.
அதனை அண்மித்த காலப்பகுயில் கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமும் வெளிநாடு அனுப்புவதாகத் தெரிவித்து 30 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளார்.
வெளிநாடு அனுப்புவதாக மேற்படி இருவரிடமும் பணத்தைப் பெற்ற போதும் அவர்கள் இருவரையும் வெளிநாடு அனுப்பாது, பணத்தையும் வழங்காது குறித்த நபர் ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து குறித்த நபருக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட இருவரும் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், வவுனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி குறித்த நபரால் 32 இலட்சம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது. அவரையும் வெளிநாடு அனுப்பாது ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, பணத்தை பெற்றுக் கொண்ட நபர் தலைமறைவாகித் திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு, வத்தளைப் பகுதியில் வசித்து வரும் 49 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.
மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்வரை நீதிமன்றத்தில் முற்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.