யாழ். நகரில் அதிபர்களுக்கு அறிவிக்காமல் மாணவர்களுக்குக் காலாவதியான தடுப்பூசி.

யாழ்ப்பாணத்தில் பைஸர் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும், அவை காலாவதியானவை என்ற உண்மையை மறைத்தே மாணவர்களுக்கு கடந்த சில நாள்களாக ஏற்றப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவந்துள்ளது.
யாழ். நகரப் பாடசாலைகளில் பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றாதவர்களும், மூன்றாவது டோஸ் ஏற்ற விரும்புவர்களுக்கும் சுகாதாரத் திணைக்களத்தால் ஊசி ஏற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்குப் பயன்படுத்தப்படும் பைஸர் தடுப்பூசி கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.
இருப்பினும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அதனை எதிர்வரும் ஒக்ரோபர் 31ஆம் திகதி வரையில் பயன்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஊடாகத் தெரியப்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், வடக்கு மாகாணத்தில் காலாவதியான தடுப்பூசியை ஏற்றும் செயற்பாட்டை வடக்கு மாகாண முன்னாள் சுகாதார பணிப்பாளராக இருந்த மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தவிர்த்து வந்தார். புதிய சுகாதாரப் பணிப்பாளராக மருத்துவர் திலிப் லியனகே நியமிக்கப்பட்ட பின்னர் அந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருந்தது.
பாடசாலை மாணவர்களுக்கோ, அவர்களின் பெற்றோருக்கோ, அதிபர்களுக்கோ காலாவதியான தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்ற தகவல் தெரிவிக்கப்படாமல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஊடகங்கள் இந்த நடவடிக்கையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து சில பெற்றோர் பாடசாலை அதிபர்களிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பியதாக அறியமுடிகின்றது.