மகசினில் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்!
கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
இந்தத் தகவலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று கொழும்பு – மகசின் சிறைச்சாலைக்கு நேரில் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி விரைவில் விடுதலைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார்.
இதையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது என்று உறவினர்கள் தெரிவித்ததுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாகத் தாங்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தையும் கைவிடுவதாகக் கூறினர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் இன்று தொலைபேசி வாயிலாக மகசின் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளுடன் தொடர்புகொண்டு பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதிகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இம்மாதம் 6ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்கள் நேற்றுக் காலை முதல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டதை ஆரம்பித்திருந்தனர்.
மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை மோசமாவதைக் கருத்தில்கொண்டு தகுந்த வாக்குறுதியை அவர்களுக்கு வழங்கி உணவுத் தவிர்ப்பை முடிவுறுத்தி பிணையிலோ அல்லது பொதுமன்னிப்பிலோ விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.