விவசாயிடம் கடன் வசூல் செய்யும் போது விபரீதம் – கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி கொலை
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளி விவசாயி மிதிலேஷ் மேத்தா. இவர் தனக்கு டிராக்டர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், மிதலேஷ் மேத்தாவின் கடன் தொகை ரூ.1.3 லட்சமாக உள்ளது, இதை உடனடியாக திருப்பி தர வேண்டும் என நிதி நிறுவனம் அவருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளது.
அத்தோடு இல்லாமல் நேற்று நிதி நிறுவனத்தின் வசூல் ஏஜன்ட் உள்ளிட்ட ஊழியர்கள் மேத்தாவின் வீட்டிற்கு வந்து பணத்தை அடாவடியாக கேட்டுள்ளனர். தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று மேத்தா கூறிய நிலையில், கடனை முழுமையாக அடைக்கும் வரை டிராக்டரை தர முடியாது என ஊழியர்கள் கூறியுள்ளனர். டிராக்டரை எடுத்து செல்ல வேண்டாம் என மேத்தா கெஞ்சிய நிலையில், அவரது 26 வயது மகளும் சம்பவயிடத்திற்கு வந்துள்ளார். 3 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணும் டிராக்டரை எடுத்து செல்ல வேண்டாம் பணத்தை தருகிறோம் என வாக்குவாதம் செய்துள்ளார்.
ஆனால் இவர்களின் கோரிக்கையை ஏற்காத ஊழியர்கள் டிராக்டரை எடுத்ததோடு மட்டுமல்லாது, மேத்தாவின் மகளின் மீது அதை ஏற்றி சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சிக்குரிய செயலில் 26 வயது கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த கிராமத்து மக்கள் ஹசாரிபாக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பெண்ணின் உடலை வைத்து போராட்டம் நடத்தினர். ரெகவரி ஏஜென்ட், நிறுவன மேலாளர் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்ததுடன் குடும்பத்திற்கு உரிய நிதி இழப்பீடு வழங்கவும் கோரியுள்ளனர்.
குற்றவாளிகளை கைது செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள நிறுவனம் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளது.