குழந்தைகள் பவுடர் தயாரிக்கும் பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் உரிமம் ரத்து
மும்பையில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் என்ற பிரபல குழந்தைகள் காஸ்மெடிக் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின், பேபி பவுடர் தயாரிப்பதற்கான உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புனே மற்றும் நாசிக்கில் எடுக்கப்பட்ட ஜான்சன் பேபி பவுடரின் மாதிரிகள் தரமானதாக இல்லை என அரசால் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சோதனையில் இந்த பேபி பவுடரின் pH value போதுமான அளவை விட அதிகமாக இருந்தது தெரியவந்தது. 5.5க்கு மேல் பிஎச் வேல்யூ இருந்தால் எந்த ஒரு சருமத்தையும் அது நாசம் செய்து விடும் என்பதே மருத்துவ விளக்கமாக இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பேபி பவுடரில் ‘கார்சினோஜெனிக்’ அதாவது புற்றுநோய் ஏற்படுவதற்கான கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை எதிர்த்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நீண்ட சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டது. இதனையடுத்து இந்த நிறுவனத்தின் விற்பனையும் கடும் சரிவைக் கண்டது.
பேபி பவுடர் தயாரிப்பாளரான ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர் தயாரிப்பதை 2023 முதல் நிறுத்துவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது. இந்நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் கனடாவில் டால்கம் பவுடர் தயாரிப்பை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிர அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து நிறுவனம் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.