எஸ்.பி.பி பாடல்களுக்கு தாளமிடுகிறார், எழுத முயல்கிறார் – சரண்
கோவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவுடன் இருப்பதாகவும் அவரது உடல்நலக் குறியீடுகள் ஒரே நிலையில் நீடிப்பதாகவும் அவர் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.
அவரது உடல்நலம் குறித்து தற்போது மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல்துறை மருத்துவர்கள் குழு, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் அவர் நினைவுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் அவருக்கு இப்போதும் செயற்கைச் சுவாசக் கருவியும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் எஸ்.பி. பாலசுப்ரமணியனத்தின் மகன் சரண் சற்று நேரத்திற்கு முன்பாக வெளியிட்ட காணொளியில், நேற்று முன்தினத்தை விட இன்று தனது தந்தையின் உடல்நிலை நன்கு தேறியுள்ளதாக தெரிவித்தார்.
“இன்று பிற்பகலில் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். நேற்று முன்தினம் நான் அவரைப் பார்த்ததைவிட, இன்று அவரது உடல்நலம் வெகுவாகத் தேறியுள்ளது. அவரது நுரையீரல் செயல்பாட்டில் சிறிது முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நான் சென்று பார்த்தபோது, நேற்று முன்தினம் இருந்ததைவிட விழிப்புடன் இருந்தார். எதையோ என்னிடம் தெரிவிப்பதற்காக எழுத முயன்றார். இந்த வாரத்திற்குள் எழுத்து மூலம் என்னிடம் பேசுவார் என நம்புகிறேன். அவருக்கு தினமும் செய்தித் தாள்களை படித்துக்காட்டச் சொல்லியிருக்கிறேன். அவர் பாடல்களைக் கேட்டுத் தாளமிடுகிறார். இதெல்லாம் அவர் நலம் பெறுவதன் அறிகுறிகள். அவருக்காக வேண்டிக் கொண்டவர்களுக்கு நன்றிகள்” என தனது காணொளியில் சரண் தெரிவித்திருக்கிறார்.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட தருணத்தில், தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் ஒரு வீடியோ காட்சி மூலம் தெரிவித்தார்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவியும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டது.