அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சு.கவினரின் உறுப்புரிமை ‘அவுட்’.

தற்போதைய அரசில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்குக் கட்சியின் தலைமை தயாராகுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சுப் பதவிகளை பெற்றவர்களின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு கட்சியின் தலைவருக்கு அதிகாரமளித்து அண்மையில் அதன் யாப்பு திருத்தப்பட்டது.
இதற்கமைய கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் தொடர்பில் அரசியல் குழுவுக்கு எதிர்வரும் நாட்களில் அனுமதிக்கப்படவுள்ளது என்று கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தற்போதைய அரசில் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளனர்.
அத்துடன் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண அண்மையில் இராஜாங்க அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டார்.
அவருக்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளர் ஜகத் புஸ்பகுமார மற்றும் சாமர சம்பத் தஸநாயக்க ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.