ஆந்திராவில் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்த சகோதரர், சகோதரிகள்… பொதுமக்கள் மீட்டனர்
3 ஆண்டுகளாக வெளியில் வராமல் இருட்டு வீட்டில் வசித்த அண்ணன், சகோதரிகளை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் நகரை சேர்ந்தவர் திருப்பால் செட்டி. அவருடைய சகோதரிகள் விஜயலட்சுமி, கிருஷ்ணவேணி. 2016 ஆம் ஆண்டில் அவர்களுடைய தந்தையும், 2017 ஆம் ஆண்டில் அவர்களுடைய தாயும் மரணம் அடைந்து விட்டனர். அதுவரை அவர்கள் அனந்தபுரம் நகரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வாழ்ந்து வந்தனர்.
தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டது போன்ற நிலைக்கு சென்ற திருப்பால் செட்டி, விஜயலட்சுமி, கிருஷ்ணவேணி ஆகியோர் 2019 ஆம் ஆண்டு முதல் வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்த்து வந்தனர். அப்போது முதல் தினமும் காலையில் ஒரு முறை மட்டும் வீட்டிலிருந்து வெளியே வரும் திருப்பால் செட்டி தேவையான சாப்பாடு,குடிநீர் ஆகியவற்றை ஒரு மணி நேரத்தில் வாங்கி வீடு திரும்பி விடுவார்.
அதன் பின் அந்த வீட்டின் கதவு அடைக்கப்படும். மீண்டும் மறுநாள் காலையில் மட்டுமே கதவு திறக்கப்படும். 2019 ஆம் ஆண்டு முதல் இதே நிலை நேற்று வரை அந்த வீட்டில் இருந்தது. இடையில் மின்சார கட்டணம் செலுத்தாத காரணத்தால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. எனவே மாலை துவங்கி மறுநாள் காலை வரை அவர்கள் இருட்டு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
மேலும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் குளித்தார்களா, ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டால் என்ன செய்தார்கள் என்பது எல்லாம் தற்போது வரை கேள்வியாகவே உள்ளன. இந்த நிலையில் அழுக்கு துணியுடன் வசித்து வந்த அவர்கள் சாப்பிட்டு போட்ட உணவு பொருட்கள், துணிமணிகள் ஆகியவற்றில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியது.
அதுவரை அவர்கள் மூன்று பேரையும் கண்டுகொள்ளாமல் இருந்த அக்கம் பக்கத்து வீட்டார் என்னவோ நடக்கிறது என்று கருதி நேற்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மிகவும் அலங்கோலமான நிலையில் அவர்கள் வசித்து வருவது தெரிய வந்தது.
வீடு முழுவதும் ஒட்டடை படிந்து இருந்த நிலையில் சாப்பிட்டு போட்ட உணவு பொருட்கள், அழுக்கு துணிகள்,,பயன்படுத்தி வீசிய பொருட்கள் ஆகியவை மலை போல் குவிந்து காணப்பட்டன. மிகுந்த சிரமத்திற்கு பின் அவர்கள் மூன்று பேரையும் குண்டு கட்டாக தூக்கி வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் மூன்று பேருக்கும் அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.