மாணவிகள் ஆபாச வீடியோக்கள் ஏதும் வெளியாகவில்லை… சண்டிகர் பல்கலைக்கழகம் மறுப்பு
பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் குளிக்கும் காட்சிகளை சக மாணவி ஒருவரே வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு பகிர்ந்ததாக அதிர்ச்சிக்குரிய புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதி கேட்டு சண்டிகர் பல்கலைக்கழகக்தில் நேற்று இரவு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக விடுதியில் பல மாணவிகள் தங்கி பயின்று வரும் நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் சக மாணவிகள் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்து அதை ஆண் ஒருவருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காட்சிகள் இணையதளத்தில் பரவியுள்ளதாகவும் புகார் எழுந்த நிலையில், மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட சில மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மாணவி மீது இபிகோ 354சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் உணர்ச்சிகரமான விஷயம் என்பதால் கவனத்துடன் கையாள்வதாக மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்து பல்கலைக்கழகம் சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் , “பல்கலைக்கழகத்தில் 7 மாணவிகள் தற்கொலை முயற்சி செய்ததாக பரவி வரும் புரளி உண்மைல்ல. எந்த மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், பல மாணவிகளின் 60 வீடியோக்கள் இணையதளத்தில் பரவுவதாக வெளியான தகவலும் அடிப்படையில்லாத போலி குற்றச்சாட்டுகள். முதல்கட்ட விசாரணையில் கைதான மாணவி தனது தனிப்பட்ட வீடியோவைத் தான் ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார் எனவும் பிற மாணவிகளின் வீடியோக்கள் ஏதும் பகிரப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அதேவேளை, மாணவர்களின் கோரிக்கை ஏற்று காவல்துறை விசாரணைக்கு பல்கலைக்கழகம் உடன்பட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு தரும். அதேபோல், மாணவர்கள் குறிப்பாக பெண் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பல்கலைக்கழகம் திடமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.