லிப்ட் கதவில் சிக்கி உயிரிழந்த பள்ளி ஆசிரியை : மும்பையில் நேர்ந்த சோகம்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மலாட் என்ற பகுதியில் செயின்ட் மேரிஸ் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 26 வயதான ஜெனெல் பெர்ணான்டஸ் என்பவர், ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு வந்துள்ளார். பகல் 1.45 மணி அளவில் ஆசிரியர்கள் அறையில் இருந்து மேல்தளத்தில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.
ஆசிரியர் அறை ஆறாவது தளத்தில் இருந்த நிலையில், ஏழாவது தளத்திற்கு செல்ல லிப்டுக்குள் நுழைந்துள்ளார். ஆனால், இவர் உள்ளே செல்லும் நேரத்தில் லிப்ட் கதவுகள் மூடியது. லிப்ட் கதவுகளுக்கு இடையே இவர் சிக்கிக்கொண்ட நிலையில், லிப்ட் மேல்நோக்கி நகர்ந்துள்ளது. இதில் ஆசிரியரை ஜெனெல் படுகாயம் அடைந்து கூச்சலிட்டுள்ளார். கூச்சலைக் கேட்டு பள்ளி ஊழியர்கள் ஆசிரியை மீட்டு, ஆம்புலன்சிலில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயம் அடைந்த ஆசிரியையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெனெல் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த பள்ளியில் கடந்த ஜூன் மாதம்தான் ஜெனெல் சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்த சில மாதத்திலேயே எதிர்பாராத விபத்தில் பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அவரின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது. சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் ஆராய்ந்து உரிய விசாரணை அறிக்கை அளிக்கப்படும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளித் தரப்பு ஏதேனும் தவறு செய்துள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.