‘தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பரவுகின்றது, இதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை’ – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் H1N1 என்று சொல்லக்கூடிய சுவைன் ப்ளூ பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய சாரலின் 5ம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்ணதாசன் குறித்த பாடல்களை பாடி அசத்தினர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு கவியரசு கண்ணதாசன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லக்கூடிய அதிகப்படியான குழந்தைகளுக்கு காய்ச்சலால் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் ஏற்படும் குழந்தைகளுக்கு படுக்கை கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. H1N1 என்று சொல்லக்கூடிய சுவைன் ப்ளூ பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் டெங்கு சிக்கன்குனியா, அனினோ வைரஸ், இன்புளுயன்சா இருக்கிறது ஆனால் அதிகமாக H1N1 வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது சுவாசக் குழாயை பாதிப்படைய செய்யக்கூடிய வைரஸ்.
மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள், குழந்தைகள், குழந்தைகளுடைய பெற்றோர்கள் குறிப்பாக குழந்தை உடைய தாய் தமிழகத்தில் பதற்றத்துடன் இருக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகையால் முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு பெரிய அளவிலான வல்லுனர் குழு அமைத்து கண்டறிந்து எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மாதிரியான காய்ச்சல் பரவுகிறது எந்த மாதிரியான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை முடுக்கிவிட வேண்டும்.
தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளது. செவிலியர்களே மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மருந்து மாத்திரைகள் இல்லை, ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் இல்லை என தெரிவிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டை மறுப்பதை விடுத்து என்ன மாதிரியான தேவைகள் இருக்கிறதோ அதை செய்ய வேண்டும். மக்களின் நலம் குழந்தைகளின் நலத்தை பார்க்க வேண்டும். காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது அண்டை மாநிலமான புதுச்சேரியில் கூட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை தேவையில்லை எனசுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்கறையோடு இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
அனைத்து இடங்களிலும் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதனால் எண்ணிக்கை சொல்வதை தவிர்த்து மறுப்பதை தவிர்த்து உடனடியாக வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். H1N1 என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதை நான் பலமுறை பார்த்துள்ளேன். கொசட்டா என்ற மருந்தை உறுதி செய்ய வேண்டும். ஆர் டி பி சி ஆர் டெஸ்ட்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .குழந்தைகள் பெற்றோர்களின் பதற்றத்தை தனிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வார்டுகளை அதிகரிக்க வேண்டும்
தற்பொழுது காத்திருக்க கூடிய சூழல் உள்ளது. அதனால் இதில் உடனடியாக அரசு கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல் பரப்புவதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை H1N1 வகை காய்ச்சல் என்றால் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் அந்த காய்ச்சல் மட்டும் இல்லை பல்வேறு வகையான காய்ச்சல்கள் தற்போது பரவி வருகிறது.
நாம் மர்ம காய்ச்சல் என்று ஒரே வழியாக சொல்லி விட முடியாது எந்தெந்த மாவட்டத்தில் எந்த மாதிரியான காய்ச்சல்கள் வருகிறது என்பதை கண்டறிய வேண்டும். நூற்றுக்கும் அதிகமான காய்ச்சல் வகைகள் இருக்கிறது. அதனால் சவாலை எதிர்கொண்டு உடனடியாக அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவரையும் குழுவையும் நியமித்து ஜீரோ டீலர் என்ற வகையில் யாரையும் காத்திருக்க வைக்காமல் உடனடியாக அவர்களை அழைத்து உரிய சிகிச்சை அளித்து போதிய மருந்து மாத்திரைகளை கொடுத்து பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.