மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மேலும் ஒருவர் பலி!
வடஅமெரிக்க நாடான மெக்சிகோ நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எனினும் சில சமயங்களில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி போட்டு வருகிறது.
அப்படி கடந்த 1985-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ரிக்டர் அளவுகோலில் 8.0 புள்ளிகளாக ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்த நாட்டை சின்னபின்னமாக்கியது. இந்த நிலநடுக்கத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.
அதன் பின்னர் 2017-ம் ஆண்டில் அதே செப்டம்பர் 19-ந்தேதி மெக்சிகோவின் பியூப்லா நகரில் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 300 பேர் பலியாகினர். இப்படி நாட்டை உலுக்கிய 2 நிலநடுக்கங்களின் நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நிலநடுக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் மெக்சிகோ சிட்டி அருகில் உள்ள மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் நேற்று முன்தினம் மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு கோல்கோமன் நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவானது. மேலும் இது பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெக்சிகோவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
இந்த பயங்கர நிலநடுக்கம் மைக்கோகன் மாகாணத்தை மட்டும் இன்றி அதனை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் தலைநகர் மெக்சிகோ சிட்டியையும் கடுமையாக உலுக்கியது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
குறிப்பாக மைக்கோகன் மாகாணத்தில் ஆஸ்பத்திரிகள் உள்பட எண்ணற்ற பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்து சின்னபின்னமாகின. அதே போல் அண்டை மாகாணமான கோலிமாவின் மன்சானிலோ நகரில் வணிக வளாகம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் பீதியடைந்த நிலையில் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது. இதற்கு முன் 2 முறை நாட்டை அதிரவைத்த அதே செப்டம்பர் 19-ந்தேதி மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது மெக்சிகோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.