யாழ். மாவட்டத்தில் போதைப் பாவனை இரட்டிப்பாக உயர்வு! – சத்தியமூர்த்தி தெரிவிப்பு.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒபிடுகின்ற பட்சத்தில் இவ்வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும், அதனைக் கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதால் உயிரிழப்புக்கள் சம்பவிப்பது அதிகரித்துள்ளது. வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில், யாழ் சிறைச்சாலையில் 10 பெண்கள் உட்பட 491 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக இருந்தனர். இந்த வருடம் 13 பெண்கள் உட்பட 854 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக உள்ளனர்.
இந்த வருடம் இதுவரை 10 பேர் போதைப் பாவனையால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குருதிக் குளாய்கள் ஊடாக, நாளங்களூடாக போதைப்பொருளை ஏற்றுகின்றபோதும் இறப்புக்கள் சம்பவித்துள்ளன. இதைவிட 185 பேர் ஹெரோய்ன் பாவனையால் சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களிடையே குறித்த போதைப்பொருள் பாவனை அதிகம் காணப்படுவதால் பாடசாலை அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவர் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் பாடசாலைகள் ஊடாக பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, மருத்துவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.