பரம்பிக்குளம் அணையின் 2வது மதகு உடைந்து தண்ணீர் வெளியேற்றம்.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் 2வது மதகு உடைந்து வினாடிக்கு சுமார் 20,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகின்றது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் கேரளா பொதுப்பணித்துறையினர் குழுவாக இணைந்து உடைந்த மதகை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது. இந்த அணை 72 அடி உயரம் கொண்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இந்த அணை தமிழ்நாடு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த பருவ மழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி இருந்தது.
இந்நிலையில் நேற்று அணைக்கு மேலும் 2000 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நள்ளிரவு அணையின் 3 மதகுகளில் 2வது மதகு உடைப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமான தண்ணீர் அணையிலிருந்து வெளியேறி ஆற்றில் வீணாக சென்றது. தகவல் அறிந்து அங்கு சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக வினாடிக்கு சுமார் 20,000 கன அடி தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டனர்.
ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நள்ளிரவு முதலில் ஆற்றங்கரையை ஒட்டி உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் கேரள மாநில பொறியாளர்கள் குழுவினர் இணைந்த உடைந்த மதகை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.