சாமி சிலையைத் தொட்ட பட்டியலின சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.60,000 அபராதம்- அதிர்ச்சி சம்பவம்
நாடு முழுவதும் பட்டியலின மக்களின் மீதான தாக்குதல் சம்பவம் என்பது தொடர்ந்து வருகிறது. இந்த கொடூர சம்பவங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தே வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 வயது பட்டியலின சிறுவன், கடந்த மாதம் 20-ம் தேதி வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு அதில் இருந்து தண்ணீரை குடிக்க எடுத்துள்ளார். இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங் (வயது 40) மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.
பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குடிநீர் பானையை தொட்ட மாணவன் மீது ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார். ஆசிரியரின் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாணவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் பாதிப்பு அடங்குவதற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே ராஜஸ்தான் மாநிலத்தில் திக்கா என்ற பகுதியைச் சேர்ந்த சதுரராம் மேக்வால் என்பவர் அங்குள்ள கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து நீரை எடுத்துக் குடித்துள்ளார். அவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை கட்டை, கம்பிகளால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். தமிழகத்திலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சிறுவர்களுக்கு திண்பண்டம் தரமாட்டேன் என்று பெட்டிக் கடைக்காரர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் பட்டியலினச் சிறுவன் ஒருவர் சாமி சிலையைத் தொட்டதற்காக கிராம பஞ்சாயத்து அவருடைய குடும்பத்துக்கு 60,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், அபராதத் தொகையை செலுத்தும் வரை ஊருக்குள் வரக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.