சீனா பதவிக்கு கொண்டு வந்த கோட்டாவை , இந்தியா அபகரித்ததா?
விமல் வீரவன்ச மற்றும் ஏனைய சுயேச்சைக் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த வார இறுதியில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவரும் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ச பற்றி தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தெரிவித்த கருத்து தவறானது என விமல் , அதிதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.
கோட்டாபய ஜனாதிபதியான பிறகு அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராகினார் எனவும், இதற்குக் காரணம் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார் என்பதும், அவரது மனைவி மற்றும் மகன் அமெரிக்க குடிமக்கள் என்பதால், அமெரிக்காவுடன் மோதலுக்கு பயந்தார் எனவும் விமல் வீரவங்ச சொன்னார்.
அதாவது ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் கோட்டாபய சீனாவுக்கு ஆதரவானவர் என விமல் வேறு வார்த்தைகளில் கூற முயன்றார்.
விமல் சொன்னது உண்மைதான்.
2014ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய , சீன நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கைக்கு வர அனுமதித்தார்.
இது இந்தியாவைக் கோபப்படுத்தியது.
அக்டோபர் 20, 2014 அன்று கோட்டாபய பாதுகாப்பு செயலாளராக டெல்லி சென்று இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார்.
அங்கு, கொழும்பு துறைமுகத்திற்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அஜித் தோவல் (Ajith Doval) கோட்டாபய விடம் தெரிவித்தார்.
அந்த விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு வந்த கோட்டாபய மேலும் ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பலை இலங்கைக்கு வர அனுமதித்தது இந்தியாவை மேலும் கோபப்படுத்தியது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலை வர அனுமதித்தன் பின்னர் 2015ஆம் ஆண்டு , இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடத்தது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தார். கோட்டாபய பாதுகாப்பு செயலாளர் பதவியை இழந்தார்.
மார்ச் 27, 2017 அன்று, கோட்டாபய பாதுகாப்புச் செயலாளர் பதவியை இழந்ததையடுத்து, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்தை சந்தித்தபோது , இந்தியா அதிர்ச்சியடையக் கூடிய ஒரு அறிக்கையை கோட்டாபய வெளியிட்டார். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால் இந்தியா இருந்தது என்றார் அவர்.
அந்த அறிக்கையை வெளியிட்ட , சில நாட்களில் சீனாவில் பாதுகாப்பு மாநாட்டிற்காக சீனா புறப்பட்டுச் சென்றார் கோட்டாபய.
உலக அரசாங்கங்களின் பாதுகாப்புத் தலைவர்கள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்படுவதே மரபாக இருந்த போதிலும், எதிர்க்கட்சி தரப்பில் இருந்த கோட்டாபயவிற்கு சீனா விசேட அழைப்பை விடுத்திருந்தது.
அதன் பின்னர், தனக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க, கோட்டாபய சுமார் ஒரு மாத காலம் சீனாவுக்கு கல்விச் சுற்றுலா என சென்றார். அதற்கான உதவித்தொகையை சீனா அவருக்கு வழங்கியது.
கோட்டாவின் சீன நட்பு வளர்ந்து கொண்டிருந்த போதுதான் இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு வந்தார்.
இந்திய பிரதமர் மோடியை கோட்டா சந்திக்க வேண்டும் என ராஜபக்சே குடும்பத்தினர் விரும்பினர். கோட்டாபய இந்தியாவை எதிர்ப்பது இந்திய உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மஹிந்த ராஜபக்ஷவும் பசிலும் நினைத்தனர்.
மகிந்தவை சந்திக்க மோடி நேரம் கொடுத்தார், இந்தியா கோட்டாவை சந்திக்க சம்மதித்தது. அந்த சந்திப்பில் கோட்டாபயவையும் பங்கு கொள்ள வைக்க மகிந்த , இந்தியாவை சம்மதிக்க வைத்தார்.
அப்படி மகிந்த, ஜி.எல்., கோட்டாபய மோடியை சந்தித்தாலும், கோத்தபாயவிடம் ஒரு வார்த்தை கூட மோடி பேசவில்லை.
அப்போது 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருந்த கோத்தபய, மோடியைச் சந்தித்த பிறகு இந்தியாவுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள முயன்றார்.
2019ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், சீன வெளிவிவகார அமைச்சர் கோட்டாபய தனது பழைய நண்பர் என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஆனால் கோட்டாபய ஜனாதிபதியானவுடன் அவரது முதல் பயணமாக இந்தியா சென்றார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை (East Terminal) இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்று பகிரங்கமாக கூறினார்.
இந்நேரத்தில் சீனா கோட்டாபயவை சீனாவுக்கு வருமாறு , சீனா அழைப்பு விடுத்திருந்தது. இதற்கான அழைப்பிதழ் சீன அதிபரால் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் கோட்டாபய கோவிட் -19 ஐ காரணமாக்கி விட்டு சீனா செல்லவில்லை.
சீனா திகைத்து போனது. இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறிய கோட்டாபய, யாழ்ப்பாணத் தீவுகளில் தொடங்கவிருந்த சீன மின் திட்டங்களை நிறுத்துமாறு சீனாவிடம் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவை குற்றம் சாட்டி அந்த திட்டங்களை சீனா திரும்பப் பெற்றது.
அதேவேளை, சீனாவிடமிருந்து வந்த உரக்கப்பலை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தகுதியற்றது எனக் கூறி கோட்டாபயவின் அரசாங்கம் அதனை ஏற்க மறுத்தது.
சீனா அதை அவமானமாக கருதியது.
அதன் பிறகுதான் பொருளாதார நெருக்கடி தொடங்கியது. பசில் ராஜபக்ச நிதியமைச்சராக சீனாவிடம் கடன் உதவி கேட்ட போதும், சீனா அதற்கு சரியாக பதிலளிக்கவில்லை.
இதன் பின்னர்தான் இந்தியா இலங்கைக்கு உதவ முன்வந்தது.
2019ஆம் ஆண்டுக்கு முன்னர் சீனாவை உருவாக்கிய தலைவராக கோட்டாபய இருந்தார். அதனால்தான் சீன சார்பு விமல் வீரவன்ச குழுவினர் கோட்டாபயவை ஆதரித்தனர்.
ஆனால் இன்று தான் தவறு செய்ததாக விமல் கூறுகிறார்.
விமல் மட்டுமல்ல , சீனாவும் தவறு செய்துவிட்டது என அவர் சொல்லவில்லை. ஆனால் அதுதான் உண்மை.
சீனா உருவாக்கிய கோட்டாபயவை இந்தியா தன்வசப்படுத்திக் கொண்டது.
நாடுகளை கடன் வலையில் சிக்க வைப்பதில் சீனா சிறந்து விளங்குகிறது.
ஆனால், அரசியல் பொறிகளை அமைப்பதில் இந்தியாவின் நிபுணத்துவத்தை சீனாவால் ஈடுகட்டி நெருங்கக் கூட முடியாது.
உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்