திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டம்.

திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இன்று கிராம மட்டத்தில் பல்வேறுபட்ட சங்கங்கள் செயற்படுகின்றன.பெயரளவில் சங்கங்கள் செயற்படுவதனைவிட வினைத்திறனாகவும் தமக்கென உருவாக்கப்பட்ட யாப்பின்படி தமது அங்கத்தவர்களின் நலன் பேணல் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயற்படல் வேண்டும்.முறைப்படுத்தப்பட்ட வகையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல்,வேறுபாடின்றி சமத்துவமாக சட்ட விழுமியங்களை பேணல் மிக முக்கியமானதாகும்.சங்கங்கள் சிறப்பாக செயற்படும் போது துறைசார் உத்தியோகத்தர்களும் தமது செயற்பாடுகளை சிறப்பாக வழங்க கூடியதாக அமையும்.
சங்கங்கள் ஏனைய சங்கங்களுக்கு முன்னுதாரணமாக செயற்படுவதுடன் தம்சார் அங்கத்தவர்களின் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் திட்டங்களை வகுத்து செயற்படல் வேண்டும்.தங்களது சங்க அபிவிருத்தி தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் தேவையாயின் அதனை அறியப்படுத்துவதன் மூலம் அவசியமான பயிற்சிகளை வழங்க முடியும்.
அத்துடன் தமது சங்கங்கள் உருவாக்கப்பட்ட நோக்கத்தை தெளிவாக உணர்ந்து செயற்படுவதன் மூலம் தங்களது சங்கத்தை வலுவான சங்கமாக மாற்றியமைக்க முடியும் என்றும் இதன்போது மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்,பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.