இணக்க அரசியல் மூலம் தீர்வு காணவே முடியாது! முன்னாள் எம்.பி. ஶ்ரீநேசன் தெரிவிப்பு.

இலங்கை அரசுடன் இணக்க அரசியல் செய்வதால் தமிழ்த் தேசியக் கட்சிகளால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:-
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அரசுடன் முரண்படாமல் இணக்க அரசியல் செய்தால்தான் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் தீர்வுகாணமுடியும் என்று இன்றும் சிலர் பேசுவதையும் முணுமுணுப்பதையும் கேட்க முடிகின்றது.
இலங்கை அரசுடன் இணக்க அரசியல் செய்து அவர்களது உள்நாட்டுப்பொறிமுறை மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்பது பேரினவாதம் என்னும் இருட்டறையில் தீர்வு என்னும் கறுப்புப்பூனையைப் பிடிக்கும் வீண்முயற்சியாகவே அமையும்.
அரசுடன் இணைந்து பணியாற்றித் தீர்வை எட்டலாம் என்பது மக்களை ஏமாற்றி அரசியல் செய்து, இன்னும் காலத்தைக் கரைக்கும் செயலாகவே அமையும்.
உளுத்துப்போன உள்நாட்டுப்பொறிமுறைகளால் பிரச்சினைகளை உருவாக்க முடியுமேயொழிய தீர்க்க முடியாது என்பதே வரலாற்று உண்மையாகும்.
தமிழ்த் தேசியக் கட்சிகளிலும் உள்நாட்டுப் பொறிமுறை பற்றிப் பேசுபவர்கள் இருந்தால் அவர்கள் வராற்றை மறக்கும் அல்லது மறைக்கும் இரட்டை முகவர்களாகவே இருக்க முடியும்.
ராஜபக்ச அரசுடன் இணக்க, ஐக்கிய அரசியல் செய்தால் கிழக்கைக் காப்பாற்றலாம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தலாம் என்ற கிழக்கிருப்புவாத இராஜாங்க அமைச்சர்கள் இரு விடயங்களை மாத்திரமே செய்கின்றார்கள். அவை அரசு சொல்வதற்கெல்லாம் கை உயர்த்துவதும் தலையாட்டுவதும் மட்டுமேயாகும்.
எதிர்த்தால் பதவிகள் காலியாகும், குற்றக்கோவைகள் இவர்களின் தலைகளைச் சுற்றிவரும். இதுதான் இணக்க அரசியலின் இழித்தவாயர்களின் நிலைமையாகும்.
நிறைவேறாத ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், கூடிய கூட்டங்கள், பேச்சுகள் ஏமாற்றங்களேயொழிய சாதனைகளாக இருக்க முடியாது. அவை இனவாத சாத்தான்கள் ஓதிய வேதங்களாகவே அமையும்” – என்றுள்ளது.