‘வவுனியாவ’ ஆக மாறிய ‘வவுனியா’ – வடக்கு பிரதமர் செயலருக்கு சி.வி.கே. கடிதம்.
வவுனியா நகர சபை, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வவுனியா என்னும் பெயர் ‘வவுனியாவ’ என்று மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உரிய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்ட 06/09/2022ஆம் திகதி 2296/05 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்குத் தங்கள் அவதானம் கோரப்படுகின்றது.
இந்த வர்த்தமானியில் ‘வவுனியா நகர சபை, வவுனியா மாநகர சபை’ ஆகத் தாபிப்பது என தமிழில் இருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் ‘வவுனியாவ உர்பன் கவுன்சில்’ என்றும் “வவுனியாவ முனிசிப்பல் கவுன்சில்’ என்றும் உள்ளது.
வரலாற்று ரீதியாக இந்த உள்ளூராட்சி சபையின் பெயர் தமிழில் ‘வவுனியா’ என்றும், ஆங்கிலத்தில் ‘வவுனியா’ என்றும் அறியப்பட்டும், பதியப்பட்டும் வந்துள்ளது. ஆங்கிலத்தில் ‘வவுனியாவ’ என்று பிரசுரிப்பது தவறானதும், வரலாற்றுப் பிறழ்வானதுமாகும்.
‘வவுனியா’ என்ற தமிழ் பிரதேசத்தின் வரலாற்றுப் பெயரை ‘வவுனியாவ’ என ஆங்கிலத்தில் அறியப்படுத்துவதோ, பதியப்படுவதோ தவறானது என்பதைப் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வந்து, ‘வவுனியா’ என ஆங்கிலத்தில் உரிய திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கக் கோரும்படி கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.