குருந்தூர்மலை, திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துக!
குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறியவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து நீதியைக் காக்க முற்பட்டவர்களே கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தொல்லியல் திணைக்களம் மிக மோசமான இனவாத திணைக்களமாகத் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
“குருந்தூர்மலையில் புதன்கிழமை எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொல்லியல் திணைக்களம் சட்டவிரோதமாக அங்கு கட்டடங்களைக் கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தொல்லியல் திணைக்களம் இப்படியாக எங்களுடைய மக்களின் நிலங்களை மிக மோசமான முறையிலே அபகரிக்கின்ற திட்டங்கள் சம்பந்தமாக பல தடவைகளிலே நாங்கள் இந்த நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பேசியிருக்கின்றோம்.
600 க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் காணிகளை அபகரிக்கின்ற இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிரதிபலனாக அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். இதுஉடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதியோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்பில் இது குறித்து பேசினோம். பணிப்பாளர் நாயகத்துக்குத் தான் உடனடியாக அறிவிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும், இந்தத் தொல்லியல் திணைக்களம் மிக மோசமான இனவாத திணைக்களமாக, தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இதேபோன்று கிழக்கிலே திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை அபகரிக்க இப்போது ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோணேஸ்வரம் இலங்கையிலே இருக்கின்ற 5 ஈஸ்வரங்களில் ஒன்று. இது மிகப் பழமை வாய்ந்தது. இந்த நாட்டுக்கு விஜயன் வருவதற்கு முன்னதாகவே 5 ஈஸ்வரங்கள் இலங்கையில் இருந்தன என்று வரலாற்று ஆசிரியர் சேர் போல் பீரிஸ் எழுதியுள்ளார்.
தற்போது அரசிலுள்ள இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவரே அங்கு வந்து மாவட்டக்காரர்களை அழைத்துச் சென்று ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுகின்றார்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அண்டியுள்ள இடங்களில் 58 கடைகளை வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களே நடத்தி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” – என்றார்.