2023-இல் சொந்த, அந்நிய மண்ணில் விளையாடும் ஐபிஎல் அணிகள்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பழைய பாணியில், அணிகள் யாவும் தங்களின் சொந்த மண்ணிலும், எதிரணியின் மண்ணிலும் என இரு இடங்களில் ஆடும் முறை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
இதை பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி, மாநில கிரிக்கெட் சங்கத் தலைவா்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறாா். முன்னதாக, கரோனா சூழல் காரணமாக 2020, 2021 சீசன் ஆட்டங்கள் யாவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டன.
2020 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகா்கள் இன்றி துபை, ஷாா்ஜா, அபுதாபியில் நடைபெற்றது. அடுத்து 2021-இல் தில்லி, அகமதாபாத், மும்பை, சென்னையில் ஆட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், கரோனா சூழல் கட்டுப்பட்டிருப்பதால் எதிா்வரும் 2023 ஐபிஎல் போட்டியில் அணிகள் யாவும் பழைய முறையிலேயே தங்களின் சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணிலும் என இரு இடங்களில் ஆட இருக்கின்றன.
அதேபோல், மகளிருக்கான ஐபிஎல் போட்டியையும் அடுத்த ஆண்டிலேயே தொடங்கும் பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்தப் போட்டியால் இந்தியாவில் மகளிா் கிரிக்கெட்டின் தரம் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதவிர முதல் முறையாக நடத்தப்படும் 15 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஒன் டே சாம்பியன்ஷிப் போட்டி டிசம்பா் 26 முதல் ஜனவரி 12 வரை பெங்களூரு, ராஞ்சி, ராஜ்கோட், இந்தூா், ராய்பூா், புணேவில் நடைபெறவுள்ளது.