ரூபாய் மதிப்பு 2ஆவது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி

உலகச் சந்தைகளில் ஒட்டுமொத்தச் சரிவுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதங்களை 75 அடிப்படை விகிதாசார புள்ளிகள் (0.75 சதவீதம்) உயா்த்தி 3 முதல் 3.25 சதவீதமாக்கியது. அந்த வங்கி தொடா்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் உயா்த்தியது.

இதுவும், உக்ரைன் விவகாரம் தொடா்பாக சா்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நியச் செலாவணி வா்த்தகம் வியாழக்கிழமை மிக மந்தமாக நடைபெற்றது.

அதன் விளைவாக, அன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 93 காசு சரிந்து 80.89 என்ற அளவில் சரிந்தது.

மேலும், வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்தன.

வங்கிகளுக்கிடையேயான அந்நியச் செலாவணி வா்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காலையில் 80.27-இல் தொடங்கியது. இடைப்பட்ட நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்ச வீழ்ச்சியாக அது 80.95 வரை கீழிறங்கியது.

இறுதியில், ரூபாய் மதிப்பு புதன்கிழமை இருந்த 79.96-ஐ விட 93 காசு குறைந்து 80.89-இல் நிறைவடைந்தது.

இந்நிலையில், உலகச் சந்தைகளில் ஒட்டுமொத்தச் சரிவுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக வீழ்ச்சியடைந்து, பலவீனமான நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டாலருக்கு நிகாரன இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் குறைந்து 81.18 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அதிகபட்ச வீழ்ச்சியாகும்.

Leave A Reply

Your email address will not be published.