PFI பந்த்.. கேரளத்தில் வெடித்த வன்முறை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் கைதான நிலையில், அதிகபட்சமாக கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பு கேரளாவில் தான் வலுவாக உள்ளது. மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான தேசிய தலைவர் ஓ.எம்.ஏ.சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன், மாநிலத் தலைவர் சி.பி.முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பி.கோயா உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர். எனவே, தேசிய புலானாய்வு முகமை நடவடிக்கைக்கு எதிராக கேரளாவில் மாநிலம் தழுவிய பந்த்-க்கு பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பு அழைப்பு விடுத்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது.
இந்த போராட்டத்தில் கல்வீச்சு, பொது சொத்துக்கள் சூறையாடல் போன்ற வன்முறை சம்பங்கள் அரங்கேறி பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் ஆழப்புழா ஆகிய மாவட்டங்களில் கேரளா மாநில அரசு போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்துள்ளன. கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிக்க பேருந்து ஓட்டுநர்கள் சிலர் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்துகளை இயக்குகின்றனர்.
ஆழப்புழா மாவட்டத்தில் லாரி மற்றும் பிற வாகனங்களும் கல்வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. கல்வீச்சு சம்பவம் காரணமாக கோழிக்கோடு பகுதியில் 15 வயது சிறுமியும், கன்னூரில் ஆட்டோ ட்ரைவர் ஒருவரும் காயமடைந்துள்ளார். ஒரு சில மாவட்டங்களில் பந்த் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருவதால் மாநிலம் முழுவதும் காவல்துறை உஷார் நிலையில் இருந்து பாதுகாப்பை பலப்படுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த பந்த் காரணமாக கேரளா பல்கலைக்கழகம், எம்ஜி பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம் ஆகியவை தங்கள் தேர்வுகளை இன்று ஒத்திவைத்துள்ளன.
வன்முறை சம்பவம் தொடர்பாக தாமாக வழக்கு விசாரணை மேற்கொண்டுள்ள கேரளா உயர்நீதிமன்றம், காவல்துறை வன்முறையை பரவுவதை தடுப்பதோடு வன்முறையில் ஏற்பட்ட சேதாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.