விமர்சனம் சினம்.
சென்னையின் புறநகர் பகுதி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் அருண் விஜய் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். தான் செய்யும் வேலைக்கு நேர்மையாகவும் கன்னியமாகவும் தன் பணியை செய்து வருகிறார். அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டருக்கு இவரின் நேர்மையால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் அருண் விஜய் மீது சற்று கோபத்தில் இருக்கிறார்.
ஒரு நாள் தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் சென்னை திரும்பும் அருண் விஜய்யின் மனைவி பாலக் லால்வானி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்ட இவரின் உடலுக்கு அருகில் மற்றொரு ஆணின் உடல் இருப்பதால் அந்த வழக்கை ‘கள்ளக் காதல்’ என வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதனால் கோபமடையும் அருண் விஜய்க்கும் அந்த இன்ஸ்பெக்டரும் மோதல் ஏற்பட அவரை அருண் விஜய் தாக்கிவிடுகிறார்.
இந்த மோதலால் அருண் விஜய் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிறகு மீண்டும் வேலைக்கு சென்று தன் மனைவின் மரணத்திற்கான உண்மை காரணத்தை தேடி வழக்கை விசாரிக்கிறார். கொலைக்கான காரணத்தை அருண் விஜய் கண்டுபிடித்தாரா? இல்லையா? இந்த கொலைக்கான உண்மை காரணம் என்ன? யார் இந்த கொலையை நிகழ்த்துகிறார்கள்? அந்த இறந்துப்போன மற்ற நபருக்கும் அருண் விஜய் மனைவிக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதிகதை.
காவல் துறை அதிகாரியாக வரும் அருண் விஜய் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கடமை தவறாத, கன்னியமான, நேர்மையான அதிகாரியாக நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். காதல் மனைவியை கொலை செய்யப்பட்ட ஆழ்ந்த சோகம், மனைவி மீதான அவப் பெயரைத் துடைக்க போராடும் சாமானியனின் கோபம் அனைத்தையும் எதார்த்தமாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.
அருண் விஜய்யின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பாலக் லால்வானி சில காட்சிகளே வந்தாலும் அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். ஏட்டையாவாக நடித்திருக்கும் காளி வெங்கட் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.
வழக்கமான சினிமாத்தனம் நிறைந்த போலீஸ் படமாக இல்லாமல் சற்று வித்யாசம் நிறைந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன். இயல்பான போலீஸ் கதாப்பாத்திரத்தை வடிவைத்து அதற்கு சரியான திரைக்கதையை வடிமைத்துள்ளார். இருந்தும் கூடுதல் கவனம் பெற்றிருந்தால் சிறப்பு கவனம் பெற்றிருக்கும். படத்தின் முதல் பாதியில் சற்று விறுவிறுப்பு குறைவாக உள்ளதால் முதல் பாதியில் அதில் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் வில்லனை புதுவிதமாக அணுகியிருப்பது பாராட்டக்குறியது. அதிகமான கதாப்பாத்திர வடிவமைப்பு இல்லாமல் படத்தை நகர்த்தியுள்ளது கூடுதல் சிறப்பு.
இரவு நேரக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதால் கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஷபீர் பின்னணி இசை ரசிக்கும் படி அமையவில்லை, விறுவிறுப்பிற்காக இணைத்திருக்கும் இசை கவனத்தை சிதறவைத்திருக்கிறது.