வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தேசிய பேரவையில் பங்கேற்போம்!
“அரசியல் கைதிகள் விடுதலை, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், திருக்கோணேஸ்வரம் – குருந்தூர்மலை பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முதலில் தாருங்கள். அதன்பின்னர் தேசிய பேரவையில் இணைவது குறித்து சிந்திக்கின்றோம்” – என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் நாடாளுமன்றத்தில் நேற்றுப் பிரதமரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற அமர்வின் இடையில் இடம்பெற்ற சந்திப்பு என்பதால், நேற்றைய அமர்வில் பங்கேற்காத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
சந்திப்பில், தேசிய பேரவையில் இணையுமாறு தமிழ் எம்.பிக்களைப் பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார்.
அவருக்குப் பதிலளித்த தமிழ் எம்.பிக்கள்,
“தமிழ் மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில் – அரசியல் கைதிகள் விடுதலை, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமனம், குருந்தூர்மலை விவகாரம் என்பவற்றுக்குத் தீர்வு காண உங்கள் அரசு உறுதியளித்தது. ஆனால், அவற்றைச் செய்யவில்லை. மாறாக திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்பு என்று புதிய பிரச்சினைகளை உருவாக்குகின்றீர்கள்.
இந்த நேரத்தில், நாம் தேசிய பேரவையில் இருந்தால் எமது மக்களுக்குப் பதில் கூற முடியாது. இதில் இருக்கும் நியாயங்களை – வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். அதன் பின்னர் தேசிய பேரவையில் அங்கம் வகிப்பது குறித்து நாம் சிந்திக்கிறோம்” – என்று கூறினர்.
இதற்கு பதிலளித்த பிரதமர், “கூடிய விரைவில் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகின்றோம்” என்று கூறினார்.
அவ்வாறு தீர்வு கிடைத்த பின்னர் தேசிய பேரவையில் இணைவது குறித்து பரிசீலிப்பதாக மீண்டும் தமிழ் எம்.பிக்கள் வலியுறுத்தினர்.