அதிர்ச்சி தரும் ஐடி வேலை மோசடிகள்.. வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு அரசு எச்சரிக்கை!
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போல, புதிதாக தாய்லாந்தில் வேலை செய்ய ஆஃபர்களை வழங்குகிறோம் என பல நிறுவனங்கள் விளம்பரம் வெளியிட்டு வருகின்றன. அப்படி ஒரு மோசடி நிறுவனம் மியான்மரின் எல்லைப் பகுதிகளில் இயங்கி இந்தியர்களை குறிவைத்து வலைவிரித்து மோசடி செய்துள்ளன. தாய்லாந்தில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்பு என்று ஆசை காட்டி இந்த மோசடி கும்பல் சுமார் 30 இந்தியர்களை மியான்மர் நாட்டிற்கு வரவழைத்து சிக்க வைத்துள்ளன. இந்த மோசடியில் சிக்கயவர்களில் 50 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் சிக்கியுள்ள மயாவாடி பகுதி அரசு கட்டுப்பாட்டில் அல்லாது, உள்ளூர் புரட்சி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இவர்களை மீட்கும் பணி கூடுதல் சவாலாக உள்ளது. இவர்களை மீட்க முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்பு நடவடிக்கையில் தீவிர முனைப்புடன் செயல்பட்டுவருகின்றது. இந்நிலையில், வெளிநாட்டு வேலை மோசடியில் சிக்கமால் இருக்க எச்சரிக்கை தரும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது, “கால் சென்டர் மற்றும் கிரிப்டோ கரண்சி மோசடியில் ஈடுபடும் சர்வதேச குழு ஐடி நிறுவனங்கள் என்ற போர்வையில், இந்தியர்களை குறிவைத்து வெளிநாட்டு வேலை என்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது.
தாய்லாந்தில் டிஜிட்டல் விற்பனை மற்றும் மார்க்கெடிங் துறையில் வேலை என்று இந்திய இளைஞர்களை ஏமாற்றியுள்ளது இந்த நிறுவனங்கள். தூபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஏஜென்டுகள் மூலமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிக்குரிய விளம்பரங்கள் பரப்பி அதன் மூலம் இவர்கள் ஐடி வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்துள்ளனர். இதில் நம்பி ஏமார்ந்து போகும் இளைஞர்களை மியான்மர் நாட்டிற்கு கொண்டு சென்று மோசமான நிலையில் சிக்கவைத்துள்ளனர்.
எனவே, சமூக வலைத்தள விளம்பரங்களை நம்பி இது போன்ற போலி வேலை கும்பலிடம் இந்தியர்கள் ஏமார்ந்து சிக்கிக்கொள்ள வேண்டாம். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் தங்கள் விசாக்களை சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிடம் சரி பார்த்து ஏஜென்டுகள் சரியானவர்கள் தானா என பல முறை பரிசோதித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.