கோடீஸ்வரன் ஆகியும் நிம்மதி இல்லை.. பணம் கைக்கு வரும் முன்னே கடன் தொல்லை! லாட்டரி வென்றவர் தலைமறைவு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ரூ.25 கோடி லாட்டரி பரிசு வென்ற ஆட்டோ ஓட்டுநர், தனக்கு நிம்மதியில்லை என வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ டிரைவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது. ஒரே நாளில் கோடீஸ்வரரான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

இதையடுத்து அவர் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார். பணம் கிடைத்த பின்னர் அதனை கொண்டு வீடு கட்டுவேன், ஏழைகளுக்கு உதவுவேன் எனக் கூறினார். இதனை தொடர்ந்து அவருக்கு தொல்லைகள் தொடங்கியது. தினசரி அனூப்பை தொடர்பு கொண்ட பலரும் அவரிடம் உதவி கேட்டு தொல்லை செய்து வந்துள்ளனர். இன்னும் அரசிடம் இருந்து பணமே கைக்கு வராத நிலையில், தினசரி பலரும் வீடு தேடி சென்று தாங்கள் துயரத்தில் இருப்பதாகவும், பணம் தந்து உதவுங்கள் எனவும் தொல்லை அளித்து வந்துள்ளனர். இன்னும் ஒரு சிலர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அனூப் வீட்டை பூட்டி விட்டு சகோதரியின் வீட்டில் தலைமறைவானார். இந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஆரம்பத்தில் பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்ததாகவும், தற்போது அதை நினைத்து மனம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பரிசு பணம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதற்குள் ஒவ்வொருவரும் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இதனால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை. என் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லவும் முடியாமல் தவிக்கிறேன்.

வெளியே சென்றால் என்னை அடையாளம் கண்டு கொண்டு ஒவ்வொருவரும் பணம் கேட்கிறார்கள். இதற்கு அந்த பரிசு விழாமலேயே இருந்திருக்கலாம். லாட்டரியில் 3-வது அல்லது 4-வது பரிசு விழுந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இப்போது என் நிம்மதியே போச்சு.

இவ்வளவு பெரிய தொகைக்கு வரி செலுத்துவது எப்படி? அதனை எவ்வாறு நிர்வகிப்பது? என்பதுகூட எனக்கு தெரியாது. இதற்காக தொழில் வல்லுனர்களின் ஆலோசனையை கேட்டுள்ளேன். இப்போதைக்கு எனக்கு கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய உள்ளேன். எனது முடிவால் யாரும் என்மீது கோபப்பட வேண்டாம். என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.