ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – நாமல் கூறுகின்றார்.
“தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்குக் காணப்படுகிறது. எனவேதான் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எவரேனும் முயற்சிப்பார்களாயின் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தேசிய சபை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து சபாநாயகர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது மக்கள் மத்தியில் கீழ் மட்டத்திலிருந்து ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் சிறந்த அனுவபத்தைக் கொண்டுள்ள கட்சியாகும்.
இது தொடர்பில் கட்சி மட்டத்திலும், தேசிய சபையிலும் பேச்சுகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம்.
ஏனைய கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்காமை அவரவரின் தனிப்பட்ட தீர்மானமாகும்.
இது தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி அவர்கள் தீர்மானங்களை எடுப்பர்” – என்றார்.