புதிய மருத்துவமனையில் தீ விபத்து.. மருத்துவர், இரு குழந்தைகள் பரிதாப மரணம்
ஆந்திரப் பிரதேசம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் கார்த்திகேயா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டுள்ளது. மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் இந்த மருத்துவமனையை கட்டியுள்ளார். மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் மருத்துவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த மருத்துமனையில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி அளவில் இந்த தீவிபத்து ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை வளாகம், மாடியில் இருந்த மருத்துவர் வீட்டில் அனைவரும் நன்றாக உறங்கியுள்ளனர்.
தீ மளமளவென பரவியதில் மருத்துவரின் 6 வயது மகள் கார்த்திகா, 12 வயது மகன் பரத் ரெட்டி ஆகியோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக மரணம் அடைந்துள்ளனர். தீவிர காயங்களுடன் மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி மற்றும் மனைவி அனந்த லட்சுமி மீட்கப்பட்டனர். இந்த நிலையில் 50 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்ட மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மருத்துவமனையில்உள்ள அனைத்து அறைகளிலும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். அறைகளில் கருப்பு புகைமூட்டம் நிலவுவதால் தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் ஆகியோர் உள்ளே சென்று பார்ப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் மகள் ஆகியோர் மரணம் அடைந்தது குடும்ப உறுப்பினர்கள், நட்பு வட்டாரங்கள் ஆகியவற்றில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.