கொரோனா முற்றிலும் நீங்கினால் தான் படப்பிடிப்புகளுக்கு வருவோம்.
கொரோனா ஊரடங்கு அடுத்த மாதமும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இப்போதே விவாதம் ஆரம்பமாகிவிட்டது. மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டது.
தமிழ்நாட்டில் இன்னமும் சினிமா படப்பிடிப்புகள் ஆரம்பமாகவில்லை. கூடிய விரைவில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. ஆனால், முன்னணி ஹீரோக்கள் அவர்களது படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார்களா என்பது குறித்த சந்தேகம் நீடிக்கிறது.
ரஜினிகாந்த் ‘அண்ணாத்தே’ படத்திலும், கமல்ஹாசன் ‘இந்தியன் 2’, அஜித் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்கள். இவர்கள் கொரோனா தொற்று முற்றிலும் நீங்கினால் தான் படப்பிடிப்புகளுக்கு வருவோம் என்று சொல்லிவிட்டதாகத் தகவல்.
விஜய் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து நடிக்க உள்ள படம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அப்படியே வந்தாலும் படப்பிடிப்பை உடனடியாக ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க வேண்டும். ஆனால், அதற்கு முன் வெற்றிமாறன் வேறு ஒரு படத்தை முடித்துவிட்டுத்தான் வருவார் என்கிறார்கள்.
கார்த்தி தற்போது ‘சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 10 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே நடக்க வேண்டும் என்பதால் அவர் நடிக்க வரலாம். விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்திற்கும் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்க வேண்டி உள்ளது. சொந்தத் தயாரிப்பு என்பதால் அவரும் நடிக்க வரலாம். சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். அவர் கைவசம் இந்த ஒரு படம் மட்டுமே தற்போது இருக்கிறது என்பதால் அவரும் நடிக்க வர வாய்ப்புகள் அதிகம்.
தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடரலாம். ஜெயம் ரவி கைவசம் ‘பொன்னியின் செல்வன்’ மட்டுமே இருக்கிறது.
விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்குமார் இருவரும் ஐந்தாறு படங்களில் நடித்து வருகிறார்கள். எந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவர்களிருவருக்கும் கால்ஷீட் குழப்பத்தை ஏற்படுத்தும்.
மத்திய அரசு அனுமதி கொடுத்த பின்னும் மாநிலத்தில் உள்ள கொரோனா நிலவரத்தை வைத்து மாநில அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்குமா அல்லது தடையை நீட்டிக்குமா என்பது இரண்டொரு நாட்களில் தெரிய வரும்.