இமாச்சல்பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 ஐஐடி மாணவர்கள் உள்பட 10 பேர் பலி
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குல்லு மாவட்டத்தின் பஞ்சார் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா வாகனம் குன்றில் இருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையான 305இல் 17 பேரை ஏற்றிச் சென்ற டெம்போ ட்ராவலர் மலைக்குன்றில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 5 பேர் பஞ்சார் மருத்துவமனையிலும் 5 பேர் குல்லுவில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும், வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் சுற்றுலாவிற்காக வந்தவர்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த விபத்தில் சிக்கியவர்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி மாநிலங்களை சேர்ந்தவர்கள். விபத்தில் உயிரிழந்த ஏழு பேரில் 3 பேர் ஐஐடி மாணவர்கள் ஆவர். விபத்து நடந்த இடத்தில் பார்வையிட்ட பாஜக எம்எல்ஏ பஞ்சார் சுரேந்தர் ஷோரி மீட்பு பணிகளை விரைந்து செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.
பருவ மழைக்காலம் என்பதால் இமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எனவே, ஆபத்து மிக்க மலை தொடர்களில் சுற்றுலா பயணிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக சில இமாச்சலில் உள்ள டைரன்ட் மலைப்பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த 80க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிய நிலையில், மாநில பேரிடர் மீட்பு குழுவின் முயற்சியால் அவர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.