உத்தரபிரதேச சட்டசபையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட திருத்த மசோதா 2022 நிறைவேற்றப்பட்டுள்ளது.
உ.பி. சட்டசபையில் கடந்த வியாழக்கிழமை அன்று பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டபோது, இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 438 மற்றும் POCSO சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய இந்த திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, பலாத்காரம், கூட்டு பலாத்காரம், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது என்ற விதி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கும் முன்ஜாமீனும் வழங்கப்பட மாட்டாது.
பாலியல் குற்றங்களில் ஆதாரங்களை உடனடியாக சேகரிப்பதை உறுதிசெய்யவும், அத்தகைய சான்றுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும், சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்பைக் குறைக்கவும், இந்த சட்ட திருத்தம் வாய்ப்பளிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு / சாட்சிகளுக்கு பயம் மற்றும் வற்புறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எந்த செயலும் நடைபெறாமல் பாதுகாக்க முயலும்.
இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சகிப்புத்தன்மை இல்லாத கொள்கை நிலைநாட்டப்படும். அவர்களுக்கான பாதுகாப்பு நிலைகளும் மேம்படும் என்று அரசு தரப்பு தெரிவிக்கிறது.