அதிமுக கலவர வழக்கில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு – சிபிசிஐடி தகவல்! யாரிடம் இருந்தது தெரியுமா?
அதிமுக கலவர வழக்கில் திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நாளில் அதிமுக அலுவலகத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஷ்பாண்டியன், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் கலவரம் ஏற்பட்டு பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. மேலும், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை திருடி சென்றதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.