தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்; தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சி.
தமிழினத்தின் விடிவுக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் இம்முறை மக்கள் கூடுதல் அக்கறை காட்டி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை எழுச்சிபூர்வமாக நடத்தினர்.
பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் ஆரம்பமானது.
பல பாகங்களில் இருந்தும் ஊர்திகளின் பவனி காலை 10 மணி முதல் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடைந்த வண்ணம் இருந்தன.
அதேவேளை, கைதடி பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் தூக்குக்காவடி எடுத்து தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
நல்லூர் நிகழ்வில் மதகுருமார்கள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், கல்விச் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் அணிதிரண்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தியாக தீபம் திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.