223 இலட்சம் கொள்ளையை தடுத்த போலீஸ் அதிகாரியின் வீரச் செயல் (வீடியோ & புகைப்படங்கள்)
இன்று (26) மதியம் அனுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம நகரிலுள்ள பிரதான தனியார் வங்கிக்கு முன்பாக, தம்புத்தேகமவைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 223 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட முயற்சி செய்த இரு கொள்ளையர்களை தம்புத்தேகம பொலிஸ் நிலையப் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தடுத்து , கொள்ளையர்களை கைது செய்துள்ளார்.
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் 42313 ‘புத்திக குமார’ என்பவரே கொள்ளைச் சம்பவத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய இரு கொள்ளையர்களையும் மடக்கிப் பிடித்து ஒரே நேரத்தில் கைது செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 48 மற்றும் 50 வயதுடையவர்களாவர் என தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
கைதின் போது , நாட்டு துப்பாக்கி (போர் 12) ஒன்று , துப்பாக்கி ரவை (போர் 12) ஒன்று, பெரிய கத்தியொன்று , கையுறை, கையடக்கத் தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தம்புத்தேகம நகரில் அமைந்துள்ள முன்னணி தனியார் வங்கி ஒன்றின் முன்பாக இன்று (26) பிற்பகல் 02.00 மணியளவில் இந்தக் கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்புத்தேகம பொருளாதார நிலையத்தில் வியாபாரம் செய்து வரும் பிரபல வர்த்தகர் ஒருவரின் பணத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் வைப்பிடுவதற்காக காரில் வந்த இருவரிடமிருந்தே , பணத்தை திருட கொள்ளையர்கள் முயற்சித்துள்ளனர்.
கொள்ளையர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கிகள் மற்றும் கூரிய கத்திகளுடனும் , ஆயுதங்களுடன் வர்த்தகரை மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பணத்தை கொள்ளையடித்த சமயத்தில் , அவ்விடத்தை கடந்து சென்ற தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் 42313 புத்திக குமார துணிச்சலாக செயல்பட்டு ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்து கைது செய்ததோடு , 223 இலட்சம் ரூபா பணத்தையும் தீரமாக போராடி பொலிஸ் காவலில் எடுத்துக்கொண்டுள்ளார்.
அதன்போது, பொலிஸ் உத்தியோகத்தருடன் சண்டையிட்ட கொள்ளையர்கள், சார்ஜன்ட் மீது சூடு நடத்துவதற்கு துப்பாக்கியை இயக்க முயற்சித்த போதும் அது வெடிக்காத நிலை காரணமாக , கொள்ளையர்களது முயற்சி பலனளிக்கவில்லை என சம்பவத்திற்கு முகங்கொடுத்த சார்ஜன்ட் தெரிவித்தார்.
அதன்பின் தனது முகத்தில் மிளகாய் பொடியை வீசிய கொள்ளையர்களை எப்படியோ சமாளித்து விட்டதாக சார்ஜன்ட் புத்திக குமார மேலும் தெரிவித்தார்.
பின்னர் தம்புத்தேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் வந்து சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த துப்பாக்கி மற்றும் 1 தோட்டா, கூரிய கத்தி மற்றும் அவர்கள் திருட முயன்ற பணம், மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் கைப்பற்றினர்.
சந்தேகநபர்கள் தற்போது தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜீவ ஹசந்த சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் தம்புத்தேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ஜே.அத்துகோரள உள்ளிட்ட அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ