சஹரானின் சாரதி உள்ளிட்ட 4 பேருக்கு பிணை.
வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கீழ் பயங்கரவாத தடைச் சட்த்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சாரதி உட்பட 4 பேரை நேற்று (26) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா ஒருவருக்கு தலா 35 ஆயிரம் ரூபா பணமும் 10 இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் கடவு சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நிபந்தனையுடன் பிணையில் விடுவித்துள்ளார்.
கடந்த 2018-11-29 திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவு, வலையிறவு பொலிஸ் சோதனைச்சாவடியில் இரு பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் 2019 ஆம் ஏப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2019 ஏப்பில் 29 ஆம் திகதி சஹரானின் கார் சாரதியான கபூர் மாமா என்று அழைக்கப்படும் சஹீர் ஆதம்லெப்பை, அப்துல் மனாப் முஹம்மது பீர்தௌஸ், ஹம்சா மொஹொதீன் முஹம்மது இம்ரான், ஹய்யாது முஹம்மட் மில்ஹான் ஆகிய நான்கு பேரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஜடி) மட்டக்களப்பு மேல் நீதிமன்றில்வழக்கு தாக்குதல் செய்ததை அடுத்து இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (26) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறைச்சாலையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு இவர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம். முகமட் அமீன் இவர்களை பிணையில் விடுவிக்குமாறு மன்றில் கோரிய நிலையில் இவர்களை தலா ஒருவருக்கு 35 ஆயிரம் ரூபா பண பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் கடவு சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் அடுத்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.