முன்னணியின் கஜா அணியே வலிந்து குழப்பங்களை விளைவித்தனர்! – பார்த்தீபன் தன்னிலை விளக்கம்.
“தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நாம் அமைதியாகவே இருந்தோம். ஆனால், கஜேந்திரகுமார் அணியினர் தாங்களாகவே தமக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஒரு புனிதமான இடத்தில் குழப்பங்களை ஏற்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்து வலிந்து எங்களைப் பிரச்சினைகளுக்குள் இழுத்து குழப்பங்கள் உருவாக காரணமாக இருந்தார்கள்.”
இவ்வாறு யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.
திலீபன் நினைவிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“திலீபன் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதத்தின் முடிவில் மாலை நேர நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. நினைவேந்தல் முடிவில் வீடு செல்ல ஆயத்தமாக நின்றிருந்தோம். அப்போது யாழ். பல்கலைக்கழக பணியாளர் வீரா அருகில் நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணியின் உறுப்பினர்கள் சிலர் வீரா மீது தூரோகி, ஒட்டுக்குழு போன்ற வார்த்தைகளைக் கொண்டு வசைபாடினார்கள்.
ஒரு வார்த்தைகூட பேசமால் பொறுமையாக இருந்த வீரா அங்கிருந்து விலகிச் சென்று தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு செல்ல முற்பட்ட போது அவர்கள் ஒட்டுக்குழு, ஈ.பி.டி.பி என்று மீண்டும் அவரைப் பார்த்து கத்தினார்கள்.
பின்னர் அவ்விடத்தில் நின்ற என்னையும் சி.தனுஜனையும் ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என்று உரக்க வசைபாடினார்கள்.
என்ன என்று நான் அவர்களிடம் கேட்ட போது அவர்கள், “நீங்கள் இந்த இடத்தில் நிற்பதற்குத் தகுதியற்றவர்கள். நீங்கள் ஒட்டுக்குழுக்கள். இதை விட்டு வெளியேறுங்கள்” என்று மிரட்டினார்கள்.
அப்போது நான் “இந்த இடத்தை விட்டு எங்களைப் போகச் சொல்லுவதற்கு நீங்கள் யார்?” என்று வினாவினேன். அதற்கு என் மீதும் தனுஜன் மீதும் தாக்குதல் நடத்த அவர்கள் முனைந்தனர். ஆனால், அதனை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சக உறுப்பினர்கள் தடுத்துவிட்டனர்.
இந்நிலையில், எங்களுடன் முரண்பட்டவர்களிடம் கேள்விகளைக் கேட்ட அங்கிருந்த பொதுமக்களுடனும் அவர்கள் முரண்பட்டார்கள். அங்கிருந்த அனைத்து பொதுமக்களும் வலிந்து பிரச்சினைகளை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடக்கின்றார்கள் என்று அவர்களைப் பேசினார்கள்.
நடந்த சம்பவம் இவ்வாறிருக்கையில் ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியின் பிரகாரம் இரு தரப்பும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக உள்ளது. ஆனால், உண்மையில் நாங்கள் அந்த இடத்தில் அமைதியாகவே இருந்தோம்” – என்றுள்ளது.