இந்திய வரலாற்றில் முதல்முறை: உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று முதல் நேரடியாக ஒளிபரப்பு!

நாட்டின் மிக உச்சபட்ச நீதி அமைப்பாக திகழ்வது உச்ச நீதிமன்றம். இங்கு, அரசியல் சாசன அமர்வுகள், தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நடைமுறைகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி தந்து வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பானது 4 ஆண்டுகள் கழித்து இன்று தான் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் நேரலையில் வழக்குகளை ஒளிபரப்பும் வழக்கத்தை தொடங்கலாம் என்ற முடிவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையில் நடைபெற்ற நீதிபதி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

முதல் நாளான இன்று பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு, மகாராஷ்டிரா சிவசேனா கட்சி அரசியல் வழக்கு, டெல்லி அரசு Vs மத்திய அரசு அதிகாரப்போட்டி ஆகிய வழக்குகள் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளன.முதல்கட்டமாக வழக்கு விசாரணைகள் ஒளிபரப்பானது யூடியூப் சேனல்களில் செய்யப்படும் எனவும் பின்னர் இதை உச்ச நீதிமன்றம் மூலம் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் வெப்கேஸ்ட் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்ற நடவடிக்கையை நேரலையில் ஒளிபரப்பலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. எனவே, பாலியல் குற்றங்கள், திருமண தகராறுகள் போன்ற வழக்குகளைத் தவிர ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் நேரலையில் ஒளிபரப்பும்.

தற்போது, குஜராத், ஒடிசா, பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றம் தங்களின் வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பி வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.