துர்கை அம்மன் சிலையைச் சேதப்படுத்திய ‘புர்கா’ பெண்கள் – நவராத்திரி பூஜையில் பரபரப்பு!
ஹைதராபாத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத புர்கா அணிந்த இரண்டு பெண்கள் நவராத்திரி பூஜையில் வைத்திருந்த துர்கை அம்மன் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர். அவர்களைக் கைது செய்த நிலையில் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் கைரதாபாத் பகுதியில் நவராத்திரிக்காக வைத்திருந்த துர்கை அம்மன் சிலையை புர்கா அணிந்த இரண்டு பெண்கள் ஸ்பேனர் மூலம் சேதப்படுத்தியதாக அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் இருவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தற்போது ஹைதராபாத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்புக்குச் சொந்தமான இடங்கள் அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து அங்கு நிலவும் சூழ்நிலையின் மத்தியில், இந்த பெண்களுக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் துர்கை அம்மன் சிலையைச் சேதப்படுத்துவதற்கு முன் இருவரும் அருகில் உள்ள மேரி மாத சிலையைச் சேதப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பெண்களும் 22 முதல் 23 வயது வரை இருக்கலாம் என்று எண்ணப்படும் நிலையில் அவர்கள் சரியான மனநிலையில் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயர், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், எதற்காக இப்படிச் செய்தனர் போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.