நெருக்கடியைப் பயன்படுத்தி காரியம் சாதிப்பதற்கு முயற்சி! – தமிழ்க் கட்சிகள் மீது குற்றச்சாட்டு.
“நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசைப் பணயக் கைதியாக்குவதற்கு விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிக்கின்றனர். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கக்கூடாது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிடுவதற்குத் தயாராகவே உள்ளனர். அது நடக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்க் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஸ்ரீலங்கா டயஸ்போரா என்பதற்குள் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இனத்தவர்களும் உள்ளனர். இந்த அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் முதலீடுகளை மேற்கொள்ளலாம். ஆனால், ஊழல் ஆட்சியெனில் எவரும் முன்வரமாட்டார்கள் என்பதையும் ஏற்றாக வேண்டும்.
இந்த அரசு மீது நம்பிக்கையின்மையால் முதலிட எவரும் முன்வர விரும்புவதில்லை. சாதாரணமாகக் கூட பணம் அனுப்பமாட்டார்கள்.
தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார். அரசைப் பணயக் கைதியாகப் பயன்படுத்துவதற்கு அவர் முற்படுகின்றார்.
பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்க முடியாது. பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் அரசியல் காரணிகளையும் அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நிதிக்காக அரசும் அடிபணிந்துவிடக்கூடாது” – என்றார்.