மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டட தொழிலாளி மகள்.
‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற கட்டட தொழிலாளியின் மகள் ரக் ஷயா, ”இந்தாண்டு இறுதியில் நடக்கும் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் மகுடம் சூடுவேன்,” என கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி மனோகர். இவர் மனைவி மலர்விழி, தையல் தொழில் செய்கிறார். இவர்களது மகள் ரக் ஷயா, 20.பட்டப்படிப்பை முடித்த இவர், அழகிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கியே பயணித்தார். ‘மாடலிங்’ தொழில் பார்த்தபடியே, அழகி போட்டிக்கு தயாராகி வந்தார்.
கடந்த 2018ல் மாநில அளவில் நடந்த ‘மோனோ ஆக்டிங்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இவர், பெப்ரவரியில் நடந்த மாவட்ட அளவிலான அழகிகள் போட்டிக்கு தேர்வானார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இம்மாதம் 18 – 21ம் திகதி வரை, மாநில அளவிலான போட்டிகள் நடந்தன. இதில், நாடு முழுதும் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற ரக் ஷயா, ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்றுஉள்ளார்.தமிழகத்தை போலவே மற்ற மாநிலங்களிலும், அழகிகள் வெற்றி பெற்றுள்ளனர்.வரும் டிசம்பரில் நடக்க உள்ள ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் ரக் ஷயா உள்ளிட்ட வெற்றியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
ரக் ஷயா கூறியுள்ளதாவது:
மிஸ் தமிழ்நாடு இறுதிச்சுற்றில், ‘எனக்கு ஏன் இந்த மகுடம் தரப்பட வேண்டும்?’ என கேட்டனர்.நான், ‘இன்னொருவருடைய மனைவியாகவும், மகளாகவும் அறியப்பட விரும்பவில்லை. எனக்கான தனி அடையாளம் வேண்டும்’ என்றேன்.இதையே நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
நிச்சயம், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வெல்வேன்.பெண்கள், அவரவர் கனவுகளுக்காக வீட்டிலேயே உட்கார்ந்திருக்காமல், முயற்சியில் இறங்க வேண்டும். மற்றவர்களின் கேலியை பொருட் படுத்தாமல், காத்திருந்தே சாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.